சட்டென பத்திக்கொள்ளும் பட்டி தொட்டியெல்லாம், சின்னக்கிளி என்றால். அவள் கரகாட்டமில்லாமல் நடக்காது எந்தத்திருவிழாவும் அந்த வட்டாரத்தில். விழா நடக்கும் ஊர் மட்டுமில்லாமல் சுத்து பட்டு ஊர்களில் இருந்தும் கூட்டம் சேரும் அவளை பார்க்க. சின்னக்கிளி பெயருக்கு ஏத்தாற்போல் அழகிலும் கிளி. வானம் பார்த்த அந்த பூமியில் இவளின் வம்சம் மட்டும் வனப்போடு வாயித்திருந்தார்கள்.
பருவம் வந்ததும் தாயை பறிகொடுத்துவிட்டு மாமன் கருமனுக்கு வாகப்பட்டாள். ஊர் ஊராய் சென்று கரகம் ஆடி காண்போர் கண்களுக்கு விருந்து ஆனாள். ஆடி முடிந்த பின், அந்த ஊர் ஜமீன்களுக்கும், மைனர்களுக்கும் இரவு விருந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் அடுத்த வருஷம் இவள் பொழப்பில் மண் விழும். இவள் ஆட ஆரம்பிக்கும் முன்னே குடிக்க ஆரம்பித்து, அடுத்த நாள் காலையில் அரையாடயுடன் அரைபோதையில் வண்டி ஏறுவான் கருமன்.
ஊரெல்லாம் உழவு ஓட்டும் சமயம் தான் இவளுக்கு சற்றே ஓய்வு. திருவிழாக்கள் தொடங்க ஒரு மாதமிருக்க இருக்க, தன்னுள் ஒரு உயிர் வேர் பிடித்திருப்பதை உணர்ந்ததாள். யாருக்கும் சொல்லாமல் தனக்கு உள்ளேயே விழுங்கிவிட்டாள். சின்னமனூர் விழாக்கு இன்னும் சில நாட்களிருக்க கிளம்ப ஏற்ப்பாடுகள் செய்ய சொன்னான் கருமன். "மாமா, இனிமேல் ஆடி பொழைக்க வேணாம், வேற ஏதாச்சும் வேல செஞ்சுக்கறேன்", என்றாள். என்ன? என்ற பார்வையோடு பார்த்தான். பதில் சொன்னால், "மாசம் தவறிடுச்சு மாமா, நமக்கு பையன் காளியம்மாக்கு பொங்க வெக்கரேனு வேண்டிட்டு இருக்கேன்", என்றாள். பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினான் கருமன்.
வந்து சேர்ந்தான், ஊர் மருத்தவச்சியுடன். இவர்களைப்பார்ததும் அழத்தொடங்கினாள். "வேணாம் மாமா வேணாம், எம் புள்ளைய விட்டிடு, மவராசன் பொறப்பான் இந்த ஈனப்பொழப்பு இதோட முடியட்டும், விட்டுடு மாமா விட்டுடு", என்று கதறினாள். கருமன் செய்கையால் சொன்னான், மருத்துவச்சிக்கு மருந்தை கலந்து கொடுக்க. மன்றாடினாள், அழுதால், என்ன எல்லாம் முடியுமோ சொல்லியும் பார்த்தாள்.
பளீர் என்ற ஒரு அரை கொடுத்து, அவள் குடுமி பிடித்து இழுத்து கத்தினான், "ஊர் ஊரா போயி ஆடற நாயி, என்னமோ நம்ப மகன் மகன்னு சொல்லுற. உசிரோட இருக்கணும்னா இந்த மருந்த குடி, பொழப்ப கெடுக்க வந்து இருக்கற இந்த கருமத்த கலைச்சிடு". அவமானம் தாங்காமல் தலைகுனிந்தாள். ஒருகணம் கூட தாமதிக்காமல் அவசர அவசரமாய் மருந்தை வாங்கிக்குடித்தாள். கனத்த மனதோடும், காலி வயிற்றோடும் திருவிழாவிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினாள்.
1 comment:
Great...and good Creativity.
Post a Comment