Monday, September 24, 2007

தீப்பிடித்த தென்றல்..

அகராதிகள் அனைத்தும் குப்பையில் போட்டேன்,
காதலுக்கு அவை தெரிவித்த அர்த்தம் வேறு,
உனை கண்டது முதல் காதல் விளங்கிற்று....
சூரியன் கண்விழிக்கும் முன் விழித்திருந்த
போராளிகளிடை உனைக்கண்டு விழித்தது என்னுயிர்.

ஒற்றை பார்வை, ஒற்றை புன்னகை, இவை
காதலின் தாய்மொழியாக, புறப்படுகிறோம் யுத்ததிற்கு
ஏந்திய துப்பாக்கியை விட உனை நானும்,

எனை நீயும் மனத்தால் சுமப்பது கடினமடி...
இரண்டு இதயங்களில் ஒற்றை கனவு,
அடர்ந்த காடுகளிடையே நகர்கிறோம்...
வேளை வந்துவிட்டது, தோட்டாக்களின் சத்தம்
நிசப்தத்தை வேரறுக்க, மீண்டும் நிசப்தம்
என் தோள்களில் நீ, நம் தேகங்களில்
வாடகைக்கு குடியிருந்த உயிர்
தோட்டாக்களின் பிரவேசத்தால் விடைபெற்றுக்கொண்டது..
மீண்டுமொரு வாடகை தேகம் வாங்கி வருவோம்,
காதலில் திளைப்போம், அன்றைக்காவது
இந்த பூமியில் வெள்ளை பூக்கள் பூக்கட்டும்....

Sunday, September 23, 2007

தவறா என்ன?

ஒற்றை குடையில்,
எங்கள் இரட்டை தேகம்
நனையாமல் பார்த்துக்கொள்ளும்

எங்கள் அன்னைக்கு,
அந்த வானம் இறங்கி வந்து
தன் கரத்தால் குடை பிடித்தால் என்ன?

தத்தளிக்கிறேன்...

அலைபேசியில்
அவள் அழைத்தாலும்,
அழைக்காமல் போனாலும்,

அலைகடலில்
அகப்பட்ட படகாய்
தத்தளிப்பது நான் தான்...

Thursday, September 13, 2007

வருவாயா?

அன்று
உன் விரல்களின்
பிடியிலிருந்து நழுவியோடும் போது,
அதட்டி விட்டு வீடுவரை கூட்டிப்போவாய்...

இன்று
வழி தெரியாமல் நிற்கிறேன்,
விரல் பிடிக்க வருவாயா?

கசக்கி எறியவாவது...

வெற்றுத்தாளாய் கிடக்கிறேன்,
கசக்கி எறியவாவது கரத்தால் தொடுவாயா?

சுகமான இம்சை..

இருக்கும் இம்சைகள் போதாதென்று
இன்னொன்றாய் காதல்..

சாப விமோசனம்...

அவள் கண்ணக்குளிகளில்..
ஒட்டிக் கொண்டிருக்கும்
Cake Cream'இற்கு சாப விமோசனம்,
என் நாவின் வரிகள்..

ஏமாற்றப்படுகிறேன்...

அவளை
பிரியும் நொடியின் பாரமெல்லாம்
கடிகார முள்ளில் கட்டிவைத்தேன்,
இருந்தாலும்
விரலிடையில் நழுவியோடும் நீராய்
எனை ஏமாற்றிவிட்டு நகர்கிறது காலம்..

கண்திறவா புயல்..

கரையோரம்
கண்திறக்காமல் போன
ஒற்றைக்கண் புயலைப்போல்,
அவள்
தலைகோத எத்தனித்து
விலகிப் போகும் என் விரல்கள்...

பத்தாம் யோகம்..

சிறிதாய்
மோர் ஊற்றிய
பழைய சாதத்திற்கு
கடிக்க
சின்ன வெங்காயமும்
ஒன்றிரண்டு பச்சைமிளகாயும்..

இடுக்கண் களையும் நட்பு...

இடுப்பிலிருந்து இறங்கி ஓடும்

அண்ணனின் அரைகால் சட்டையை

இறுக பிடித்து நிறுத்தும்

என் அரை நான் கயிற்றிலாடும்

சிறிய ஊக்கு..

அவளை தொடா வெள்ளம்..

அவளுக்காக
சிந்திய கவித்துளிகள் எல்லாம்,
வெள்ளமாய் பெருகிய போதும்..
அவளது கால் நனைக்கவில்லை
காதல்..

பதிலில்லா கேள்விகள்..

சூம்பிப்போன
தன் அண்ணனின் கால்களை
தடவிக்கொண்டே கேட்கிறாள் ஒரு தங்கை,
"அம்மா, அண்ணா எப்ப விளையாட வரும்?"

மனதின் பயனம்..

இனி
ஒவ்வொரு மே மாதத்திலும்,
தாத்தாவையும்,
அவர் எனக்கு கட்டிய ஆட்டாந்தூரியையும்
நலம் விசாரிக்க
மறக்காமல் செல்லும் என் மனது...

வேறு இடத்தில்..

அக்காவின்
திருமணத்திற்கு விற்றுப்போன
காளை மாட்டிற்கு பதிலாய்

பூட்டிய ஏரில்
ஜோடி மாடாய் என் அம்மா...

ஆசிரியையாய்..

ஓட்டை கூரை வழியே
நிலவையும் நட்சத்திரங்களையும்
ரசிக்க கற்றுக் கொடுத்தவள் அவள்...

கடல் தேடும் நதியாய்...

கடல் தேடி
ஓடும் நதி ஏமாற்றங்காணும்,
குளங்களை
கடலென நினைத்து..

அப்படியே பயனிக்கிறது
என் காதல் நதி அவளைத்தேடி...

வார்த்தைகள் தொலையும் நேரம்..

ஜன்னல் காற்றில்
தொலைந்து போகும்
தேனீர் கோப்பையின் ஆவியாய்
என்னுள்ளேயே தொலைந்து போகும்
வார்த்தைகள்..
உன்னிமைகள் கட்டிக் கொள்ளும்போது...

தோற்றுப்போகவில்லை காதல்..

ஒரு
பேருந்து பயனத்தில்
அவள் என் தோளின் தலை வைத்து
உறங்கிய நிமிடங்களை நீட்டிக்க முடியாமல்
தோற்றுப் போனேன் காலத்திடம்.. ..

ஆனாலும்
தோற்றுப்போகவில்லை காதல்..

அக்காவை வழியனுப்பிவிட்டு...

என் கால்களும், ரயிலின் சக்கரங்களும்
எதிரெதிர் திசையில் பயனிக்க..
அடம்பிடிக்கும் குழந்தையாய்
உன் கால்களை கட்டிக்கொண்டு வரமறுக்கிறது
என்னுயிர்...

அன்றும் இன்றும்..

அன்று,
ஒத்தையடிபாதையில்
யாருக்கு யார் வழிவிடுவது
என்ற ஏக்கத்தில் நின்றோம்..

இன்றும்,
தயக்கத்துடன்
நிற்கிறோம் யார்
காதலை முதலில் சொல்வதென்று...

:-(

பேசிக்கொண்டே நடக்கும் போது
வரும் மெளனங்களில்
நான் அவளுக்கு அன்னியமாகிறேன்...

சாத்தியமா?

கீழேயிறங்கிவிட்ட
மூக்கு கண்ணாடியை
சரி செய்துவிட்டு போகிறாள்..

இனி
எப்படி
சரியாய் பார்ப்பது?

நிதர்சன உண்மை..

உலகின்
எந்த மொழியில்
காதல் என்று எழுதினாலும்..

மனதில்
ஒரு சிரு
வலி இருக்கத்தான் செய்கிறது..

மௌனத்தையும் சேர்த்து...

இதை என்னவென்பது??

அவளை
நினைத்துக் கொண்டு
தூங்கி எழுந்த விழிப்புகளில்

மனதின்
ஒரு மூலையில்
அவளேடு வாழ்ந்ததாய் ஒருநினைவு..

இதை என்னவென்பது??

என்னவென்று சொல்வது??

திட்டிவிட்ட பிறகு
"Sorry" என்று சொல்லும் போதெல்லாம்,
'போடா பைத்தியம்' என சொல்லி
எனை கட்டிக்கொள்வாள்..
ஆம் பைத்தியம் தான்
காதல் பைத்தியம் தான்..

அல்லிக்கு அழைப்பு..

தூங்கிப்பேன அவளின்
கால் விரல்களில் மெதுவாய்
நான் நெட்டை முறிக்கும் ஓசை கேட்டு
இரவில் தினம் கண் விழிக்கிறது
அல்லி..

யாருடையது பெரியது?

SOAP தண்ணீரில்
ஊதித் தள்ளிய நீர்க்குமுளிகளில்

யாருடையது பெரியது
என்று போட்டுக்கொண்டோமே தவிர,

நம்மில் யாருடைய
நட்பு பெரியது என்று சண்டையிட்டதேயில்லை...

சாமரம்...

காற்று வீசா இரவுகளில்,
அவளை சுகமாய் தூங்கவைக்கும்,
என் கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்று...

மறதி...

அந்த நாள்
ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டே
ஊருக்கு திரும்பும் வேளையில்
காலில் குத்திய முள்ளை
மறக்கவைத்தது
தோள் கொடுத்த தோழர்களை
சந்திக்கப்போகும் நினைவு..

தெரியவில்லையே..

உள்ளங்கை கொண்டு
தடுத்து ஏமாற்றுகிறாள்,
அவள் விழியினுள்
எட்டிப்பார்க்கும் சூரியனை
எனை எப்படி ஏமாற்றப்போகிறாளோ??

நான் ரசித்தது...

ஒரு கச்சேரியில்
நான் கேட்டு ரசித்ததெல்லாம்,
காற்றில் அலையும்
அவள் கருங்கூந்தலின் சங்கீதம் மட்டும் தான்...

முரண்..

வேடிக்கை பார்ப்பதற்கு
ஜன்னல் ஓரம் அமர்ந்தாய் நீ..
நீ பார்த்ததை விட
உனை பார்த்தது தான் அதிகம்...

பரிதவிப்பு..

என் பேருந்தை
விட்டுவிட்ட பரிதவிப்பை விட
உன் பேருந்து வந்து விடுமோ?
என்ற பரிதவிப்பில்
தான் அதிகம் வேர்க்கிறேன்...

அழியாத ஓவியம்..

எனை மாதிரியே
எத்தனையோ பேர் கிறுக்கிப் போயிருந்தாலும்,
நெஞ்ஜில் அழியாத ஓவியமாய் அந்த L.K.G A முதல் Bench..

தேடல்..

தாயைத்தேடும்
குழந்தை மனமெனக்கும் உண்டு,
நீ என்
அருகில் இல்லாத போது...

நினைவுகள் கொல்வதில்லை..

அம்மா,
தொலைவில் யாரோ
நம்மை நினைந்து கொண்டால்
விக்கல் வரும் என்பது பெரும் பொய்..
அது நிஜமாய் இருந்தால்
பல நாள் முன்பே
விக்கி விக்கியே இறந்து போயிருப்பேன்..