Monday, July 6, 2009

பொழைக்காத பொழப்பு...

சட்டென பத்திக்கொள்ளும் பட்டி தொட்டியெல்லாம், சின்னக்கிளி என்றால். அவள் கரகாட்டமில்லாமல் நடக்காது எந்தத்திருவிழாவும் அந்த வட்டாரத்தில். விழா நடக்கும் ஊர் மட்டுமில்லாமல் சுத்து பட்டு ஊர்களில் இருந்தும் கூட்டம் சேரும் அவளை பார்க்க. சின்னக்கிளி பெயருக்கு ஏத்தாற்போல் அழகிலும் கிளி. வானம் பார்த்த அந்த பூமியில் இவளின் வம்சம் மட்டும் வனப்போடு வாயித்திருந்தார்கள்.


பருவம் வந்ததும் தாயை பறிகொடுத்துவிட்டு மாமன் கருமனுக்கு வாகப்பட்டாள். ஊர் ஊராய் சென்று கரகம் ஆடி காண்போர் கண்களுக்கு விருந்து ஆனாள். ஆடி முடிந்த பின், அந்த ஊர் ஜமீன்களுக்கும், மைனர்களுக்கும் இரவு விருந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் அடுத்த வருஷம் இவள் பொழப்பில் மண் விழும். இவள் ஆட ஆரம்பிக்கும் முன்னே குடிக்க ஆரம்பித்து, அடுத்த நாள் காலையில் அரையாடயுடன் அரைபோதையில் வண்டி ஏறுவான் கருமன்.

ஊரெல்லாம் உழவு ஓட்டும் சமயம் தான் இவளுக்கு சற்றே ஓய்வு. திருவிழாக்கள் தொடங்க ஒரு மாதமிருக்க இருக்க, தன்னுள் ஒரு உயிர் வேர் பிடித்திருப்பதை உணர்ந்ததாள். யாருக்கும் சொல்லாமல் தனக்கு உள்ளேயே விழுங்கிவிட்டாள். சின்னமனூர் விழாக்கு இன்னும் சில நாட்களிருக்க கிளம்ப ஏற்ப்பாடுகள் செய்ய சொன்னான் கருமன். "மாமா, இனிமேல் ஆடி பொழைக்க வேணாம், வேற ஏதாச்சும் வேல செஞ்சுக்கறேன்", என்றாள். என்ன? என்ற பார்வையோடு பார்த்தான். பதில் சொன்னால், "மாசம் தவறிடுச்சு மாமா, நமக்கு பையன் காளியம்மாக்கு பொங்க வெக்கரேனு வேண்டிட்டு இருக்கேன்", என்றாள். பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினான் கருமன்.

வந்து சேர்ந்தான், ஊர் மருத்தவச்சியுடன். இவர்களைப்பார்ததும் அழத்தொடங்கினாள். "வேணாம் மாமா வேணாம், எம் புள்ளைய விட்டிடு, மவராசன் பொறப்பான் இந்த ஈனப்பொழப்பு இதோட முடியட்டும், விட்டுடு மாமா விட்டுடு", என்று கதறினாள். கருமன் செய்கையால் சொன்னான், மருத்துவச்சிக்கு மருந்தை கலந்து கொடுக்க. மன்றாடினாள், அழுதால், என்ன எல்லாம் முடியுமோ சொல்லியும் பார்த்தாள்.

பளீர் என்ற ஒரு அரை கொடுத்து, அவள் குடுமி பிடித்து இழுத்து கத்தினான், "ஊர் ஊரா போயி ஆடற நாயி, என்னமோ நம்ப மகன் மகன்னு சொல்லுற. உசிரோட இருக்கணும்னா இந்த மருந்த குடி, பொழப்ப கெடுக்க வந்து இருக்கற இந்த கருமத்த கலைச்சிடு". அவமானம் தாங்காமல் தலைகுனிந்தாள். ஒருகணம் கூட தாமதிக்காமல் அவசர அவசரமாய் மருந்தை வாங்கிக்குடித்தாள். கனத்த மனதோடும், காலி வயிற்றோடும் திருவிழாவிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினாள்.

Wednesday, July 1, 2009

சாமி குத்தம்..

காலம்: 1970களின் தொடக்கம்.

இடம்: கோயமுத்தூரின் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்தில் சிங்காநல்லூர் கிராமம்.

தன் தோட்டத்தின் வடகிழக்கு இருந்த எல்லை முனியப்பனை கும்பிட்டு விட்டு கிளம்பினார் பெரியசாமி நாயக்கர். கடவுள் பக்தி மிகுந்தவர் பெரியசாமி நாயக்கர். அதுவும் எல்லை முனியப்பசாமி மீது அளவில்லா பக்தி. தன் ஊர், தன் தோட்டம், தன் குடும்பம் எல்லாவற்றிற்கும் காவலாய் இருப்பது முனியப்பன் தான் என்று நம்புபவர். ஊரில் எளவு விழுந்திருந்த நாட்கள், வீட்டில் கவிச்சி காய்ச்சும் நாள், இப்படி சில நாட்கள் தவிர எல்லா நாட்களும் தவறாமல் முனியாப்பனுக்கு பூஜை போடுவார்.

அந்த கிராமத்தில் படிப்பு வாசனை பெற்ற சில பெருசகளில் இவரும் ஒருவர். கல்வி கல்லாமல் இருப்பது மடமை என்பதை கடவுள் பக்திக்கு மேலாக நம்பினார். தன் தோட்ட வேலைக்கு வரும் விருமன் மகள் முதற்கொண்டு தன் கிராமத்தின் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்று விரும்பினார். கிராமத்தின் சாலைகள் எல்லாம் விரிவு படுத்தி தார் போட்டால் வேலை, பள்ளி சென்று வர உதவியாய் இருக்கும் என்று கிளம்பினார் சர்கார் அலுவலகம் தேடி. மறக்காமல் கும்பிடு போட்டுவிட்டு சென்றார் முனியப்பனுக்கு.

கிராமத்தின் நல்ல நேரமோ, இவர் நல்ல நேரமோ சர்கார் அலுவலகத்தில் இவருடன் படித்த சீனிவாச ஐயங்கார் தான் முக்கிய பதவியில் இருந்தார். விரிவு படுத்தாத சாலையின் ஓரத்தில் தான் இருந்தது நாயக்கர் தோட்டத்து முனியப்பசாமி கோவிலின் பலி பீடம். சிநேகிதன் பெரியசாமி பற்றி நன்கு தெரிந்திருந்த சீனிவாச ஐயங்கார் உத்தரவிட்டு இருந்தார் பலி பீடமோ கோவிலோ சேதப்படாமல் சாலை விரிவு படுத்தவேண்டும் என்று. வேகாமாய் வந்தது சாலை விரிவு படுத்தலும் தாரும். முனியப்பசாமி மட்டும் பலிபீடம் இட்டு சிறிதாய் ஆக்கிரமித்து இருந்தார் சாலையை.

கடந்த ஒன்று இரண்டு வருடமாய் நாயக்கர் குடும்பத்தில் நல்லதும் கெட்டதுமாய் சம்பவங்கள் நடந்து வந்ததால், அமாவாசை பூசை பெறாமல் காத்து இருந்தார் முனியப்பசாமி. அமாவாசையில் நள்ளிரவில் கோழி ஒன்றை பலி குடுத்து சிறிதாய் மதுவை வைத்து பூசை போட்டால் முனியப்பன் பலி கேட்க மாட்டார் என்பது நாயக்கரின் அசையாத நம்பிக்கை.

நம் பெரியசாமி நாயக்கருக்கு ஒரே மகன். கருப்பண்ணன் அவர். தினப்பத்திரிக்கை வராத கிராமத்தில் இருந்து இந்தியாவின் சிறப்பு மிக்க கல்லூரியில் படித்து, அமெரிக்காவில் வேலையில் இருந்தார். பெரியசாமி நாயக்கர் தன் மகன் டெலிபொன் கம்பெனியில் வேலை செய்வாதாக சொல்வார். உண்மையில் கருப்பண்ணன் டெலிபொன் கண்டுபிடித்த கம்பெனியில் ஆராய்ச்சியாளராக இருந்தார்.

காலையில் வந்த போன் அழைப்பில் ஆடிப்போய் இருந்தார் கருப்பண்ணன். அவசர அவசரமாய் தன் மேலதிகாரியிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்ப தயாரானார். இரண்டாம் நாள் வந்தும் சேர்ந்தார். கிராமமே திரண்டு வந்து இருந்தது. திரும்பி வர முடியாத தூரம் சென்று இருந்தார் பெரியசாமி நாயக்கர். உச்சி பூசைக்கு சென்ற மனுஷன் திரும்பி வராமல் போனதை பார்த்த சின்னம்மாள் பேச முடியாமல் சிலையாய் ஆனார், மகனை கண்டதும் வெடித்தார் “அந்த முனியப்பசாமி அப்பாவையே பலியா எடுத்துகுச்சுடா கருப்பன்னா”.

குறுகிய சாலையில் நேருக்கு நேர் மோதாமல் இருக்க விலகிய வண்டி ஒன்று பலி பீடத்திற்கு பூசை போட்டுக்கொண்டிருந்த நாயக்கரை தோழோடு இடித்தது. பீடத்திற்கு பூசை செய்து கொண்டுஇருந்தவர் அதன் மேலயே விழுந்து உயிரை இழந்தார். இதை அறிந்த கருப்பண்ணன், நொய்யல் ஆற்றங்கரையில் நாயக்கரின் இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு திரும்பி வரும் போது, சீனிவாச ஐயங்காரிடம் சொன்னார், “அந்த பீடத்த எடுக்காம ரோடு போட்டது தான் காரணம், அந்த பீடாத எடுத்திட்டு ரோடு போடா ஏற்பாடு பண்ணுங்க. இனிமேல் முனியப்பன் பலி வாங்கமாட்டார்.” அப்படியே நடந்தது. நாயக்கருக்கு அப்புறம் யாரையும் பலி வாங்காத முனியப்பனை பற்றி இப்போதும் ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு, “தினமும் பூச போட்டு வந்த நாயக்கர கூட்டிட்டு போயிடுச்சுப்பா இந்த முனியப்ப சாமி” .