Thursday, January 27, 2011

சனிப்பொணம்..

பெரியவர் அவர், வயது அறுபத்திரண்டு.1960'களில் ஊர் விட்டு ஊர் வந்து கலப்பு திருமணம் செய்து கொண்ட சிலதுகளில் அவரும் ஒருவர். தனக்கு துணையாய் வந்த உறவு மட்டும் போதுமென்று அந்த நகரத்திலயே தங்கிவிட்டார். வேலை, மகன், சொந்த வீடு இப்படி மகிழ்ச்சியின் ஊற்றுகள் திறக்க, அமைதியாய் உருண்டது காலம். பின்னிரவில் நடந்த விபத்தொன்றில் மகனை தொலைத்துவிட்டு திரும்பவும் இரு மரமாய் நின்றனர் அவர்களிருவரும். மெதுவாய் உருள்வதை நிறுத்திக்கொள்ளவில்லை காலம். வேலை, மனைவி, இவை எல்லாம் பறிகொடுத்து போக மீதமிருந்தது அவரும், வீடும். வெள்ளிமுட்டையிடும் வாத்தாய் இருந்தது வீடு. முன்பக்கத்தை வாடகைக்கு விட்ட வகையில் வரும் வரும்படியோண்ட்ரே நிதிஆதரமாய் இருந்தது.

ஒரு மாரிக்காலத்தின் தொடக்கத்தில் குடியிருந்த தம்பதியரில், கணவன் இல்லாத சனிக்கிழமை பொழுதொன்றில் பெண்மணி நடு வீட்டில் தொங்கினாள். வீட்டின் முதலாளி என்ற முறையில் சாட்சியம் கூற, விசாரணை செய்ய அழைத்து சென்றனர் பெரியவரை. காக்கிசட்டைகளின் வாசனை, பூட்ஸ்களின் சத்தம், கேளா வசைமொழிகள், வித்தியாசமான ஓலங்கள்.. இவை எல்லாம் வாடிக்கை ஆயின சில நாட்களுக்கு. விசாரணை என்ற பெயரில் வீட்டிலும் காக்கி சட்டை வாசனை, பூட்ஸ்களின் சத்தம். வீட்டில் விசாரணைகளை நிறுத்த கொடுத்த லஞ்சம், வரும்படியில்லா செலவுகள் இப்படி
மெதுவாய் கரைய ஆரம்பித்தது கையிருப்பு.

மெதுவாய் ஒரு பூதம் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது வீட்டினுள்ளே. அது யாரையும் குடி வர விடவில்லை. அந்த பூதம் பேசும் பல குரல்களில், ஆனால் உருவம் கிடையாது. ஒற்றை வரும்படி ஆதாரமும் நின்று போக, அவரின் அன்றாட தேவைகளின் ஓலங்கள் காதில் விழவேயில்லை அந்த பூதத்திற்கு. கடனாய் கொடுக்கவும் யோசனை பலருக்கு. பிற்பகல் ஒன்றில் விட்டதை பார்த்துகொண்டு இருந்தார், மெதுவாய் எழுந்து தள்ளாடி நடக்க ஆரம்பித்தார் கடை ஒன்றிற்கு. வீட்டின் வெளியே பூதம் சொல்லிக்கொண்டு இருந்தது, "அந்த வீட்டுல அந்த பொண்ணோட ஆவி இருக்கும்பா".


"என்ன வேணும் பெரியவரே? ஆறடிக்கு கயிறு குடுப்பா."