Tuesday, December 30, 2008

தெரியாமலேயே போகட்டும்..

நம் நடுஇரவின் சிறு விழிப்புகளில்,

எனக்கு தெரியாமல் நீ என் தலை கோதுவதும்,
உனக்கு தெரியாமல் நான் உன் கன்னம் வருடுவதும்,
நம் இருவருக்கும் தெரியாமலேயே போகட்டும்..

Friday, December 26, 2008

பூத்திருந்த ஈரம்... :)

"வெளியே பெய்யும் மழையும் மிச்சமாய் கண்ணாடியில் பூத்திருக்கும் ஈரம்.. அதில் உன் விரல்பிடித்து எழுதிப்பார்த்த நம் பெயர்.. மழை நின்றாலும், ஈரம் காய்ந்தாலும், அழியாமல் நம் காதல்......."

Friday, December 19, 2008

ஏனோ எப்போதும்

"நிர்க்குமிழிக்குள் அடைப்பட்ட காற்றாய் 

என் மேலான அவளின் காதல், ஏனோ எப்போதும் அவள் ஊதும் நிர்க்குமுழிகளை 
உடைக்க எனக்கு பிடித்திருக்கிறது..."

Friday, December 12, 2008

அந்த நாள் ஞாபகம்...

இடுப்பிற்கும் அரைக்கால் சட்டைக்கும்

இடையில் நடக்கும் சண்டையில், 
பேசி கை கோர்க்க வைக்கும் அந்த ஊக்கு!!!

Sunday, November 16, 2008

அது போலத்தான்...

பேருந்துப்பயணத்தில் உனக்கும் எனக்கும் இடையில் வந்தமரும் மழலைகளை எப்படி கோவிக்க முடிவதில்லையோ அது போலத்தான், உன் ஊடல்களையும்..

Saturday, October 25, 2008

மீண்டும் மீண்டும்..

சாயும்காலத்தின் நிழலாய் நீண்ட வாக்குவாதம், 

பின்னிரவின் இருட்டோடு,
நம் முதுகுகளின் இடைவெளியில் புதைந்து போனது.. 
விடியலில் என் நெற்றியில் விழும் 
முத்தத்தின் ஈரத்தில் மீண்டும் பூப்பூக்கும் நமது காதல்...

Tuesday, September 23, 2008

என் தவம் இதற்குத்தான்..

சட்டென நீ திமிரும் போது, 

என் விரலிடையில் சிக்கி அவிழ்ந்து,
ஒளிந்து போன பாசிமணிகளாய் இருக்கட்டும் 
உன் வெட்கம்....

Wednesday, May 21, 2008

என்ன சொல்கிறாய்?

"இப்ப எல்லாம் கவிதை எழுதறது இல்லையே,
என்ன ரசிப்பத விட்டுட்டியா?"
என்று அப்பாவித்தனமாய் கேட்கிறாய்..
இதை ரசிக்க மட்டும்,
என்றும் கவிதை எழுதுவதை நிறுத்தலாம் நான்..

Thursday, March 6, 2008

தலைப்பு தேவையில்லை.. :(

நம் ஜோடிக்கால் தடங்கள் பயணித்த தூரம் எட்டிப்பார்த்து திரும்புகிறேன், தொலைவில் நிற்கிறாய், ஒற்றைககரம் காட்டி தொலைவை தெரிவிப்பாயா? இல்லை, இருகரம் நீட்டி அருகில் அழைப்பயா? தாய்நாட்டை விட்டு சென்றவர்கள் தாம் அகதிகளா? இல்லை, நாட்டை விட்டு தாய் சென்றதும், இந்த மகனும் ஒரு அகதி தான்..

Tuesday, February 26, 2008

வேண்டியது

கீழே விழுந்தவுடன்
அருகிலிருக்கும் அம்மாவைப் பார்த்து
அழும் மழலையும் நானும் ஒன்று தான்,
இருவருக்கும் வேண்டியது,
பாசமாய் ஒரு தழுவல்..

Tuesday, January 22, 2008

எனக்கு தெரிந்தது..

பொய்யெனத் தெரிந்தும்
உன் கோபங்களுக்கு,
பொய்யாய் வருத்தப்படுகிறேன்
மெய்யாய் நீ வந்து
என் மெய் தழுவுவாய்
எனத்தெரிந்து..

Sunday, January 6, 2008

இந்த பிரிவு நிரந்தரமில்லை..

உன் சுட்டு விரல் பிடித்துக்கொண்டு வந்தேன் நிலவை ரசிக்க,
இப்போது நீ,
விரலை விடுவித்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று நிலவை காட்டுகிறாய்,
இந்த பிரிவில் எனக்கு சோகம் இல்லை, நிலவு தேய்வது வளர்வதுற்குதான்...