Monday, October 18, 2010

கூவிக்கூவி..

கிராமங்களில் வாங்கிய கனவை நகரங்களில் தொலைத்த இந்திய ஜனத்தொகையின் பெருன்பான்மையில் அவனும் ஒருவன். அவன் பெயர் குமார். வானம் பார்த்த பூமியில் வாங்கிய கடனை அடைக்க, வந்தான் புது டில்லிக்கு 14-ஆம் வயதில். தொழில் அமைந்தது, சாந்தினி சௌக் போன்ற வியாபார தெருக்களில் hand-bag, money purse, belt விற்பது. இன்றைக்கு வயது 34. தொழில் அதே, ஆனால் குடும்பம், குழந்தைகள் உண்டு. பன்னிரண்டு ருபாய் hand bag ஆறு ருபாய் purse ஒன்பது ருபாய் belt இப்படி வாங்கி உருப்படிக்கு ஒன்றாய், இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வைத்து விற்க வேண்டும். "இப்படி அதிகமா விக்கறது அநியாயம் இல்லைங்க, அப்ப தா போலீஸ் மாமூல், மீட்டர் வட்டி, கூரை ஒழுகும் வீட்டு வாடகை, traffic சிக்னல்ல நிக்கற கார்ல இருந்து பொருள் வாங்கி ஏமாத்தி ஓடற ஆளுங்க, இப்படி எல்லாரையும் தாண்டி நாலு காசு பாக்க முடியும், வயித்த கழுவ முடியும்" இது அவன் வழக்கு, மறுக்க மனம் வருவதில்லை.

வெளிநாட்டு பயணிகளை பார்த்தால் கொண்டாட்டம் தான், சுலபமாய் ஏமாற்றி காசு பார்க்க முடியும். "சைக்கிள்ள போறவன் வண்டில போகணும்னு ஆச படறான், வண்டில போறவன் கார்ல போக ஆச படறான், தெனமும் காஞ்சி குடிகார நா ஒரு நாள் சுடு சோறு திங்க ஆச படறது தப்பா?, ஒலகத்துல எப்படி எல்லாமோ எமாத்தராங்கலாமா, அவங்கள மொதல்ல சுடுங்க அப்புறம் என்கிட்டே வாங்க" அவனுக்கு அவனே சொல்லிகொள்ளும் ஆறுதல். ஊர் முழுவதும் சிறிதும் பெருதுமாய் போஸ்டர்கள் பார்த்து, சிறிது உற்சாகமாய் இருந்தான் குமார். நிறைய வெளிநாட்டு பயணிகள் வருவர், கொஞ்சம் நெறைய பணம் பார்க்கலாம் என்று மனக்கணக்கு போட்டு இருந்தான்.
இவனது இயற்கை எதிரி மழை, ஊரே வணங்கி வரவேர்த்தாலும், இவன் பொழப்பு கெடுத்து போகும் மழை. இந்த முறை நாள் முழுவதும் பெய்தது, கூரை ஒழுகும் வீட்டை சுற்றிலும் நீர். வேலை செல்ல முடியவில்லை, வீட்டுக்காரி பாத்திரம் கழுவிய கொஞ்சமும் போனது மீட்டர் வட்டிக்கு, கையில் சொற்பதிலும் சொற்பம். வேலைக்கு கிளம்பினான், சாந்தினி சௌக்கில் கால் வைத்த நேரம், வந்த போலீஸ்காரர், இருந்த சொற்பத்தையும் உருவிக்கொண்டு, துரத்தி விட்டார்.. "ஊர்ல வெளையாட்டு போட்டிங்க நடக்குது, பத்து நாளைக்கு ஏதும் விக்க கூடாது, மீறி வித்த, ஆறு மாசம் உள்ள போக வேண்டி வரும்" மெதுவாய் முனகிக்கொண்டே வந்தான், வீட்டில் முனகலோடு படுத்து இருந்தாள் செல்ல மகள்.
மூன்று நாள் முன்னால் பெய்த மழையோடு பரிசாய் வந்தது ஜன்னி.
வீட்டுக்காரியின் தினகூலியில் இன்னும் பத்து நாள் ஓட்ட வேண்டும், மருகும் மகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். மிச்சம் இருக்கும் சிறுசுகளை காய வைத்து விட்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வந்தான் அரையும் குறையுமாய். நாட்களை எண்ணிக்கொண்டே காத்து இருந்தான் வேலை செல்ல, நோய்க்கு காத்து இருக்க தெரியவில்லை, ஒரே மகளின் கேட்கும் திறனை பறித்துகொண்டது. அவளுக்கு மட்டுமல்ல, வீட்டில் எல்லாரிடமும் அமைதி நிலவியது . ஊருக்கும் நாட்டுக்கும் விளையாட்டு, சில சமயம் எல்லாரையும் ஆட்டி விடும். நாட்கள் கடந்து, கூவி கூவி மீண்டும் விற்க ஆரம்பித்தான், மிச்சமிருக்கும் வாழ்கையை..