Monday, September 24, 2007

தீப்பிடித்த தென்றல்..

அகராதிகள் அனைத்தும் குப்பையில் போட்டேன்,
காதலுக்கு அவை தெரிவித்த அர்த்தம் வேறு,
உனை கண்டது முதல் காதல் விளங்கிற்று....
சூரியன் கண்விழிக்கும் முன் விழித்திருந்த
போராளிகளிடை உனைக்கண்டு விழித்தது என்னுயிர்.

ஒற்றை பார்வை, ஒற்றை புன்னகை, இவை
காதலின் தாய்மொழியாக, புறப்படுகிறோம் யுத்ததிற்கு
ஏந்திய துப்பாக்கியை விட உனை நானும்,

எனை நீயும் மனத்தால் சுமப்பது கடினமடி...
இரண்டு இதயங்களில் ஒற்றை கனவு,
அடர்ந்த காடுகளிடையே நகர்கிறோம்...
வேளை வந்துவிட்டது, தோட்டாக்களின் சத்தம்
நிசப்தத்தை வேரறுக்க, மீண்டும் நிசப்தம்
என் தோள்களில் நீ, நம் தேகங்களில்
வாடகைக்கு குடியிருந்த உயிர்
தோட்டாக்களின் பிரவேசத்தால் விடைபெற்றுக்கொண்டது..
மீண்டுமொரு வாடகை தேகம் வாங்கி வருவோம்,
காதலில் திளைப்போம், அன்றைக்காவது
இந்த பூமியில் வெள்ளை பூக்கள் பூக்கட்டும்....

No comments: